★★ அன்பு சகோதர சகோரிகளே இதோ உலகத்தின் கடைசி காலம். இயேசு வருகிறார் மனந்திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

Friday, June 7, 2013

கர்த்தரையே நம்பிடுவோம்


          கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள். - (சங்கீதம் 125:1).

           ஒரு நாள் கடலிலே மீன் பிடிக்க சென்ற அந்தோனியின் படகு ஒரு சுழலில் சிக்குண்டதில் அவன் மரித்து போனான். அவனது மகனும் மீன் பிடிக்க சென்ற போது விஷ மீன் தாக்கி மரித்து போனான். இப்பொழுது பேரன் மீன் பிடிக்க செல்ல வலைகளை வாங்கி படகை ஆயத்தப்படுத்தி கொண்டிருந்தான். இதை கண்ட ஒருவர், 'உன் தாத்தாவும் அப்பாவும் கடலுக்குள் சென்று இறந்து போனார்கள். நீயும் செல்கிறாயே, உன் உயிர் மேல் உனக்கு ஆசையில்லையா?' என்றார். இவர்கள் இருவரது சம்பாஷணைகேட்டு கொண்டிருந்த ஒரு பெரியவர், அவரிடம், ' உன் தாத்தா எப்பொழுது இறந்தார்?' என்று கேட்டார். அதற்கு அவர், என் தாத்தா தூங்கும்போது இறந்தார்' என்றார். 'ஆம், உன் அப்பாவும் தூங்கும்போது நெஞ்சுவலி வந்து தானே இறந்தார். ஆகவே நீயும் அப்படி நினைத்து தினமும் தூங்காமல்  இருக்கிறாயா?' என்று கேட்டார். பதிலே பேசவில்லை மற்றவர். 'அவன் மீன் பிடிக்க செல்கிறேன் என்றால் திரும்பி விடுவேன் என்ற நம்பிக்கையில் தான் செல்கிறான்' என்றார்.
.
           இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் ஒரு நம்பிக்கையில்தான் வாழ்கின்றனர். சிலர் தங்கள் செல்வாக்கில் நம்பிக்கை வைக்கின்றனர். சிலர் தங்கள் கல்வி, ஞானம் இவற்றில் நம்பிக்கை வைக்கின்றனர். சிலர் தங்களிடமுள்ள சொத்து, பதவியில் நம்பிக்கை வைக்கின்றனர். இன்னும் சிலர் மூட நம்பிக்கை மீது தங்கள் நம்பிக்கையை வைத்து பயந்து வாழ்கின்றனர். இப்படி விதவிதமாய் மனிதன் ஒவ்வொன்றின் மீதும் வைக்கும் நம்பிக்கை அவ்வப்போது ஏமாற்ற்தையும், பயத்தையும் கொண்டு வரும். சூழ்நிலை மாறும்போதும், மனிதனின் மனநிலை மாறும்போதும் நம்பிக்கை இழந்து விடுவோம்.
.
            ஆனால் நமது நம்பிக்கையை கன்மலையாம் தேவன் மேல் வைக்கும்போது, அது அசையாது. வேதத்திலே தேவனுடைய தாசனாகிய தாவீது அநேக முறை 'கர்த்தாவே நாம் உம்மை நம்பியிருக்கிறேன்' என்று கர்த்தர் மேல் உள்ள நம்பிக்கையை கூறி, தன்னை திடப்படுத்தி கொள்கிறார். எப்பக்கத்திலும் சத்துருவினால் நெருக்கப்படுகிற அவருக்கு தன்னையும் அறியாமல் பயம் வரும்போதும், 'நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன் என்றும், 'தேவனை நம்பியருக்கிறேன். நான் பயப்படேன்' என்றும் கூறுகிறார். ஒரு ராஜாவே தன் படை பலத்தையோ, பண பலத்தையோ நம்பாமல் தன் முழு நம்பிக்கையையும் தேவன் மேல் வைத்திருப்பாரானால், நாம் ஏன் இன்னும் நம் பிள்ளைகளையும், மற்ற மனிதர்களையும், செல்வாக்கையும், சொத்து சுகங்களையும் நம்பி, அவ்வப்போது பயந்து புலம்ப வேண்டும்?
.
           பிரியமானவர்களே, உங்கள் நம்பிக்கை எதன் மேல் உள்ளது? வயதான பின் என் பிள்ளைகள் என்னை கவனித்து கொள்வார்கள் என்று அவர்களை நம்புகிறீர்களோ? என் கடன் பாரத்தை என் பெற்றோர் கொடுக்கும் சொத்தின் மூலம் சரி செய்து கொள்ளலாம் என்று அவர்களை நம்புகிறீர்களோ? நான் வேலை பார்க்கும் கம்பெனி ஒரு பிரச்சனையும் இல்லாதது, ஆகவே எனக்கு எந்த பண கஷ்டமும் வராது என்று உங்கள் கம்பெனியை நம்புகிறீர்களோ? என் படிப்பிற்கு யாரும் கூப்பிட்டு வேலை கொடுப்பார்கள் என்று படிப்பை நம்புகிறீர்களோ? நான் உடலுக்கு கேடு விளைவிக்காத உணவையே உண்கிறேன், நல்ல உடற்பயிற்சி செய்கிறேன், என் ஆரோக்கியத்திற்கு எந்த கேடும் வராது என்று உங்கள் பெலனை நம்புகிறீர்களோ? ஒரு சகோதரன் முப்பத்தைந்து வயதானவர், நன்கு உடற்பயிற்சி செய்து உடலை கட்டு கோப்பாக வைத்திருந்தார். அளவான குடும்பம், நல்ல வேலை, சரியான உணவு எல்லாம் இருந்தும், ஒரு நாள் கடைக்கு போய் சாமான்களை வாங்கி வந்தவர், 'நெஞ்சு வலி, கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா' என்று தன் மகனிடம் சொல்லி, அவன் தண்ணீர் கொண்டு வருவதற்குள் அவர் உயிர் பிரிந்து விட்டது, பக்கத்தில் வைத்தியர் இருந்து, அவர் வந்து CPR செய்தும் எந்த பலனும் இல்லாமல் அவர் சிறு பிள்ளைகளை அனாதையாக விட்டு மரித்து போனார். ஆம், நாம் நம்பியிருக்கிற காரியங்கள் எல்லாம் ஒரு நாள் நம்மை விட்டு போகலாம், கைவிட்டு விடலாம். ஆனால் 'கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்'. நம் நம்பிக்கையை கர்த்தர் மேல் வைப்போமா? நாம் எதுவும் நிலைத்திராத காரியங்கள், மனிதர்கள் மேல் நம் நம்பிக்கையை வைக்கும்போது, பிரச்சனைகள் வரும்போது நாம் அசைந்து போகிறவர்களாக மனம் பதறி நம்பிக்கையற்றவர்களாக மாறி விடுவோம். ஆனால் கர்த்தர் மேல் நம் நம்பிக்கையை வைக்கும்போது, பர்வதத்தை போல எந்த பிரச்சனை வந்தாலும் அசையாதவர்களாக, கர்த்தரை  உறுதியாய் பற்றி கொண்டு பயமின்றி வாழ முடியும். கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான் (நீதிமொழிகள் 16:20), கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான் (நீதிமொழிகள் 28:25) என்று பார்க்கிறோம். ஆகவே நம்மை செழிக்க வைக்கிற, நம்மை பாக்கியவானாய் மாற்றுகிற கர்த்தர் மேல் நம் நம்பிக்கையை வைப்போம். அவர் நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா!
.
கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்
சீயோன் மலைபோல் உறுதியுடன்
அசையாமல் இருப்பார்கள் 
... 
கர்த்தரை நேசித்து அவர் வழியில்
நடக்கும் மனிதர் பேறுபெற்றோர்
உழைப்பின் பயனை உண்பார்கள்
நன்மையும் நலமும் பெறுவார்கள்
 
 
ஜெபம்

         எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எங்கள் நம்பிக்கையே நீர்தான் ஐயா. உம்மையன்றி நாங்கள் எதில் மேல் நம்பிக்கை வைத்தாலும் அதினால் எந்த பயனும் இல்லையே தகப்பனே. உலகத்தின் காரியங்களில் நாங்கள் எங்கள் நம்பிக்கையை வைக்காமல், உம்மேல் எங்கள் முழு நம்பிக்கையையும் வைத்து, சீயோன் மலை போல் அசையாமல் வாழும்படி எங்களுக்கு கிருபை தாரும்.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment