★★ அன்பு சகோதர சகோரிகளே இதோ உலகத்தின் கடைசி காலம். இயேசு வருகிறார் மனந்திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

Monday, August 18, 2014

சுமக்க முடியாத சிலுவை

                                                   
              அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். மத்தேயு 16:24.

           ஒரு மனிதன் கர்த்தரிடம், 'ஆண்டவரே, நான் சுமக்கிற இந்த சிலுவை மிகவும் பாரமாயிருக்கிறது. என்னால் இதற்கு மேல்  சுமக்க முடியவில்லை' என்று வருத்தப்பட்டு கொண்டான்.  அப்போது கர்த்தர், 'சரி மகனே, என்னோடுகூட வா' என்று அந்த மனிதனை அழைத்து கொண்டுபோய், சிலுவைகள் நிறைய இருந்த ஒரு அறைக்குள் கொண்டு சென்று, 'உன் சிலுவையை இங்கே வைத்து விட்டு, அங்கு தெரியும் கதவின் வழியாக சென்று, உன்னால் தாங்ககூடிய அளவு உள்ள சிலுவையை தெரிந்தெடுத்து கொள்' என்று கூறினார். அந்த மனிதனும், தன் சிலுவையை    இந்த பக்கத்தில் வைத்துவிட்டு, மற்ற கதவின் வழியாக உள்ளே சென்றான். அங்கு விதவிதமான சிலுவைகள் இருந்தன. சில பாரமானதாக, சில உயரமானதாக, சில தூக்க முடியாததாக   இப்படி அநேக சிலுவைகள் அங்கு இருந்தன. கடைசியில் தூரத்தில் ஒரு சிறிய சிலுவை அவன் கண்களில் பட்டது. உடனே, அந்த மனிதன், ஆண்டவரிடம், 'ஐயா, இந்த சிலுவை எனக்கு போதும், இதை   நான் எடுத்து கொள்கிறேன்' என்று கூறினான். அப்போது ஆண்டவர், 'மகனே, அந்த சிலுவை நீ முதலில் கொண்டு வந்த அதே சிலுவைதான்' என்று கூறினார்.

           சில வேளைகளில், நாமும் கூட அப்படித்தான் நினைக்கிறோம். நான் படுகிற மாதிரி பாடுகளை யாரும் பட மாட்டார்கள். நான்  தான் பெரிய சிலுவையை சுமந்து கொண்டு இருக்கிறேன் என்று நினைத்து கொள்கிறோம். ஆனால் தேவன் சொல்லுவார், 'மகனே,  நீ நினைக்கிறதுதான் அப்படி, ஆனால் உன்னை விட பல விதத்தில் பல மடங்கு சோதிக்கப்பட்ட மக்கள் தங்கள் சிலுவையை சுமந்து சென்று இந்த உலகத்தை ஜெயித்திருக்கிறார்கள். ஆகையால் நீ கலங்காதே' என்று சொல்வார்.

          இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து,  தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்' என்று கூறினார். இந்த வசனத்தின்படி, இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிலுவை உண்டு. ஒருவன் இயேசுவை பின்பற்ற விரும்பினால், சுகபோகமாக அல்ல, தங்கள் ஆசீர்வாதங்களை பின்பற்றி அல்ல, தங்களது சிலுவையை எடுத்து கொண்டு அவரை பின்பற்ற வேண்டும். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன் (யோவான் 16:33) என்று சொன்னவர்,  நாம் சிலுவையை தூக்கி சுமக்கும்போது, நம்மோடு கூட அவரும் சுமந்து வருகிறார்.

         நமக்காக அன்று பார சிலுவையை சுமந்த தேவனல்லவா அவர்? ஏற்கனவே அவர் சுமந்த விட்டபடியால், அதனுடைய வேதனைகளை அவர் அறிந்திருக்கிறார். நாம் சுமக்கிற சிலுவைகளாகிய பாடுகள், வேதனைகள், துக்கங்கள், நிந்தைகள், துன்பங்கள் எல்லாவற்றையும், அவர் ஏற்கனவே அனுபவித்திருக்கிறபடியால், நமக்கு எல்லாவிதத்திலும் உதவி செய்ய வல்லவராகவே அவர் இருக்கிறார்.

          ஒருவேளை இன்று, 'நான் மிகவும் பாரமான சிலுவையை (கஷ்டத்தை) சுமக்கிறேன்' என்று நீங்கள் எண்ணுவீர்களானால், உங்களை தேற்றி கொள்ளுங்கள். 'கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்' (சங்கீதம் 55:22) என்று அவர் மேல் உங்கள் பாரத்தை வைத்து விடுங்கள். அவர் உங்களை ஆதரிப்பார், அவர் உங்களை விசாரிப்பார், அவர் உங்களை தேற்றுவார். நம்முடைய பாரங்களை சுமக்கிற தேவன் நமக்கு இருக்கும்போது, நாம் எதை குறித்தும் ஏன் கவலைப்பட வேண்டும்? மற்றவர்கள் முன் நாம் வெட்கப்பட ஒருநாளும் அவர் அனுமதிக்க மாட்டார். நீங்கள் ஒருவேளை வருத்தப்பட்டு கனமான சிலுவையை சுமந்து கொண்டிருந்தீர்களானால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறுவதை கேளுங்கள், 'வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்;  நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' (மத்தேயு 11:28). இப்படி ஆறுதலாய் சொன்ன ஒரே தெய்வம் இயேசுகிறிஸ்துதான். அவரிடத்தில் செல்லும்போது, அவர் நிச்சயம் உங்களுக்கு இளைப்பாறுதலை தருவார். அவர் வாக்கு மாறாதவர். ஆமென் அல்லேலூயா!

கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
கலங்கி தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்
நீதிமான் தள்ளாட விடமாட்டார்
நித்தமும் தாங்கி நடத்திடுவார்

                                                                       ஜெபம்
         எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். நாங்கள் சுமக்க கூடாதபடி எங்களுக்கு இந்த உலகில் பிரச்சனைகள் அதிகம் உண்டு தகப்பனே, நாங்கள் பாரத்தை சுமந்து சுமந்து களைத்து விட்டோம் தகப்பனே, எங்களுக்கு இளைப்பாறுதல் வேண்டும் ஐயா. உம்மிடத்தில் வருகிறோம். எங்களது பாரத்தை உம்மேல் வைத்து விடுகிறோம். எங்களை ஆதரியும், எங்களுக்கு இளைப்பாறுதலை தாரும். எங்கள் சிலுவைகளை  இலகுவாக்கும் தகப்பனே. நீர் அப்படி செய்வதற்காக உமக்கு நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment