★★ அன்பு சகோதர சகோரிகளே இதோ உலகத்தின் கடைசி காலம். இயேசு வருகிறார் மனந்திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

Monday, December 25, 2017

கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி-2017

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

  உலக இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ளும் நாளே கிறிஸ்துமஸ். சில குழந்தைகள் தங்கள் கல்வி ஆண்டு முடிந்தவுடன் பயன்படுத்தாத நோட்டுபுத்தகங்களின் எழுதாத பகுதிகளையெல்லாம் சேர்த்து, அவற்றை புதிய நோட்டுகளாக தைத்து ஏழை மாணவர்களுக்கு கொடுக்கிறார்கள்.

இவ்விதமே ஒவ்வொருவரும் தன்னிடம் உள்ளதை பகிர்ந்து கொண்டு, எல்லோரும் இந்த கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாடினால் கிறிஸ்து நம்மில் பிறப்பார். வெறும் கொண்டாட்டங்களை ஆண்டவர் வெறுக்கிறார். ஆமோஸ் 5:21-ல் உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்” என்று ஆண்டவரே கூறுகின்றார்.

“ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்படிவதே எல்லாப்பலிகளை விட மேலான பலியாகும்” என்று 1 சாமு 15:22 கூறுகிறது.

லுாக் 6:38-ல் இயேசு, “கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்” என்று கூறுகிறார். நாம் எதைப் பிறருக்கு கொடுக்கிறோம்?

இலவசமாய் பெற்றுக் கொண்டீர்கள், இலவசமாய் கொடுங்கள் “ என்ற வசனத்தின்படி நாம் ஆண்டவரிடமிருந்து இலவசமாய் பெற்றுக் கொண்ட நம் தாலந்துகளைப் (பணம்) பிறருக்காக செலவு செய்ய வேண்டும். நம்முடைய நேரத்தைப் பிறருக்காக செலவு செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் மன்னிப்பைக் கொடுக்க வேண்டும்.

மத். 18:35-ல் இயேசு, “உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதர சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை உங்களை மன்னிக்க மாட்டார்” என்று கூறுகிறார். எனவே நம் எதிரிகளை மன்னித்து அவர்களை நேசித்தால் அதுவே சிறந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.

கர்த்தரது அளவற்ற கிருபையினால், நாம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறோம். ருஷா வருஷம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆவலோடு எதிர்பார்க்கிறார்களே தவிர, கிறிஸ்துமஸ் பண்டிகை, நமக்கு கொடுக்கும் போதனைகளை பெரும்பாலானோர் கற்றுக் கொள்வதில்லை. இந்த பண்டிகையின் போது மூன்று விஷயங்களை நாம் சிந்திப்போம்.

கன்னி மரியாள் நமது ஆண்டவருக்குத் தாயானவர் என்றாலும், அவர் மன்னன் அகுஸ்துராயனால் பிறப்பிக்கப்பட்ட கட்டளைக்கு கீழ்ப்படிந்து நாசரேத்திலிருந்து பெத்லகேம் சென்றார். தேவன், தமது அடியாளுக்காக இந்த கட்டளையை நிறுத்தவில்லை. அச்சமயம் கன்னி மரியாள் நிறைமாத கர்ப்பவதி. ஆகவே, இரண்டு மாதம் கழித்து ராயன் இந்த உத்தரவை போடும்படி தேவன் நியமித்திருக்கலாம்.

ஆனால், அவ்வாறு அவர் செய்யவில்லை. கன்னி மரியாளும் தனது உரிமைக்காக வாதாடவில்லை. கோவேறு கழுதையில் 90 மைல் சவாரி செய்ய வேண்டியிருந்தது. தமது குமாரனை பெற்றெடுக்கும் தாயாருக்காக ஒரு ரதத்தைக் கூட தேவன் ஏற்பாடு செய்யவில்லை.

தங்குவதற்கு சத்திரத்தில் கூட இடம் தரவில்லை. மாட்டுத் தொழுவத்தில் தான் இடம் கொடுத்தார். அதற்காக மரியாளும் வாதாடவில்லை.

நம்மில் அனேகர், “தேவன் எனக்கு பண வசதி கொடுக்கவில்லை, பதவி கொடுக்கவில்லை,” என்றெல்லாம் முணுமுணுப்பது உண்டு. ஆனால் நாம் இங்கு காண்பது என்ன? பரிசுத்த மரியாளுக்கு பேறு கால சமயத்தில் உதவி செய்ய ஒருவரும் இல்லை. தாயே, பிள்ளையைப் பெற்றெடுத்து துணிகளில் சுற்றி முன்னணையிலே கிடத்தியதாக பார்க்கிறோம்.

நமது வீட்டில் பிள்ளை பிறந்தால் அதை நமது பணக்கார நண்பர்களுக்குச் சொல்லி அனுப்புவோம். பெரிய பதவியில் உள்ளவர்கள், பணக்காரர்கள் வந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். அதை பெருமையாக நாலு பேரிடம் சொல்லிக் கொள்வோம். ஆனால், தேவன் தமது ஒரே பேறான குமாரன் பிறந்ததை சாதாரண எளிய மேய்ப்பருக்குச் சொல்லும்படி செய்கிறார். அவர்கள் வந்து பார்த்ததை ஒரு கவுரவமாக நினைத்தார்.

மனிதகுலம் ரட்சிக்கப்பட வேண்டுமானால், தேவகுமாரன் தமது மகிமையுள்ள தெய்வீக மேன்மையை தியாகம் செய்து, பூலோகத்தில் மனிதனாகப் பிறக்க வேண்டும். எல்லோரும் காணவும், பழகவும் வேண்டுமானால் எளிய குடும்பத்தில் பிறக்க வேண்டும்.

மனுக்குலம் எளிமையை, துன்பத்தைச் சகிக்கும் தன்மையை, பிறரது அநியாயங்களைப் பொறுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் அவர்களுக்கு முன்மாதிரியாக வேண்டும். கிறிஸ்துமஸ் பண்டிகை கற்றுக் கொடுக்கும் தாழ்மையை, எளிமையை, தியாக சிந்தையை இந்த 
கிறிஸ்துமஸ் பண்டிகையில் ஏற்றுக் கொள்வோம்.


அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 


No comments:

Post a Comment