★★ அன்பு சகோதர சகோரிகளே இதோ உலகத்தின் கடைசி காலம். இயேசு வருகிறார் மனந்திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

Monday, September 21, 2015

ஆசீர்வாதத்தின் தேவன்


             என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். - (மல்கியா 3:10).

           ஹென்றி பி. கிரோவெல் (Henry P. Crowell ) என்பவர், ஒரு பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும், அவரது சிறு வயதில் காசநோயினால் பாதிக்கப்பட்டார். அதினால் அவர் பள்ளியை விட வேண்டி இருந்தது. அவர் ஒரு நாள், டி.எல் மூடி பிரசங்கியாரின் செய்தியை கேட்க நேர்ந்தது. அப்போது அவர் தீர்மானித்தார்,  ‘என்னால் பிரசங்கிக்க முடியாது. ஆனால் சிறந்த தொழிலதிபராக முடியும், ஆண்டவரே, உமக்கு சித்தமாயிருந்தால், நான் ஆரம்பிக்கும் தொழிலில் நல்ல லாபம் அடைய உதவி செய்யும், நான் அதிலிருந்து உமக்கு உண்மையாக உம்முடைய ஊழியத்தை தாங்குவேன்'  என்று பொருத்தனை செய்தார்.
.
           வைத்தியர்களின் ஆலோசனைப்படி, அவர் இருந்த இடத்தை விட்டு வெளியே ஏழு வருடங்கள் இருந்த பின்பு முற்றிலும் சுகமானார். பின் ஓஹியோ (Ohio) என்னுமிடத்தில் Quaker Mills என்னும் சிறிய ஓட்ஸ் தயாரிக்கும் ஆலையை ஆரம்பித்தார். பத்து வருடங்களுக்குள் அமெரிக்காவின் ஒவ்வொரு வீட்டிலும் ஓட்ஸ் (Oats) காலை உணவாக மாறியது. அவரும் தன் தசமபாகத்தை பத்தில் ஒரு பங்காக ஆரம்பித்து, படிப்படியாக உயர்ந்து 70 சதவீதம் தேவனுடைய ஊழியத்திற்கு கொடுக்க ஆரம்பித்தார். இன்றும் Quaker Oats உலகமெங்கும் பரவி, அநேகர் பயன்படுத்துகிறார்கள். ஒரு மனிதனின் உண்மையினால்,  அவனுடைய செய்கைகளையும் தொழிலையும்  கர்த்தர் ஆசீர்வதித்தார்.
.
               ஒரு வாலிபன் தொழிலை ஆரம்பித்து தோல்வியை கண்டான். அப்போது அவனுடைய நண்பன் அவனிடம்,  ‘நீ கர்த்தரை முதலாவது வைக்காவிட்டால், உன் தொழிலால் பயனில்லை’ என்று கூறினான். அப்போது அந்த வாலிபன்,  ‘என்னுடைய (Cheese) சீஸ் செய்யும் தொழிலில் நான் தேவனை என் பங்காளராக சேர்த்து கொள்கிறேன். அவர் சொல்கிறபடி நான் அவருடன், அவருக்காக உழைப்பேன் என்று தீர்மானித்தவனாக, தன் லாபம் எல்லாவற்றையும் கர்த்தருக்கென்று கொடுத்தபோது, அவனுடைய சீஸ் வியாபாரம் செழித்தோங்கியது. அது யார் என்று கேட்கிறீர்களா?  Kraft Cheese Company - யின் முதலாளி J.L. Kraft தான் அவர்.
.
           இப்படி, கர்த்தருக்கு கொடுத்து, ஆசீர்வதிக்கப்படடவர்களின் எண்ணிக்கை சொல்லி முடியாது. தசமபாகம் கொடுப்பதால் நமக்கு ஆசீர்வாதமே ஒழிய குறைவு ஒரு நாளும் வராது. எத்தனையோ உதாரணங்களை சொல்லி கொண்டே போலாம். நீங்கள் தசம பாகம் கொடுக்கிறீர்களா?  என் சம்பளமே மிக குறைவு,  நான் அதில் எப்படி கர்த்தருக்கு கொடுப்பது என்று யோசிக்கிறீர்களா? கொடுத்து பாருங்கள். 

            உங்கள்  களஞ்சியஙகள் நிரம்பி வழியும்படி இடமில்லாமற் போகுமட்டும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். கடன் மேல் கடன்,  நான் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை,  எப்படி அடைப்பது என்று திணறி கொண்டு இருக்கிறீர்களா? உங்கள் சம்பளத்தில் கர்த்தருக்கென்று முதலில் தசமபாகத்தை எடுத்து கொடுங்கள், உங்கள் கடன் சீக்கிரமாய் முடிந்து போவதை காண்பீர்கள். சம்பளம் வந்தவுடனே அவனவன் வந்து பிடுங்கி கொண்டு போகிறான் என்று சொல்கிறீர்களா, தசமபாகத்தை எடுத்து வைத்து விட்டு மற்றதை கொடுங்கள். கர்த்தர் சொல்கிறார், இதனால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று. செய்துதான் பாருங்களேன், ஹென்றி கிரோவெல் போல 70 சதவிகிதம் கொடுக்கும் கிறிஸ்தவராய் நீங்கள் மாறிவிடுவீர்கள். தங்கள் இயலாமையிலிருந்து கர்த்தருக்கென்று கொடுத்து, மில்லினர்களாக மாறின எத்தனையோ பேருண்டு. கோல்கேட் பேஸ்ட் நிறுவனர் திரு கோல்கேட் அவர்கள்,  J.C. Penny நிறுவனர் திரு J.C. Penny அவர்கள்...
.
               சரி,  கொடுப்பது என்று இப்போது நீங்கள் தீர்மானித்திருப்பீர்களானால் யாருக்கு கொடுப்பது என்ற கேள்வியும் வரும். ‘என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்’  என்று தேவன் சொல்கிறார். நீங்கள் செல்லும் ஆலயத்திற்கு கொண்டு கொடுக்க வேண்டும். தேவன் தம் சுய இரத்தத்தால் சம்பாதித்த சபை, அதிலே அவருடைய ஆசீர்வாதம் விளங்குகிறபடியால் அங்கு உங்களுடைய தசமபாகம் செல்ல வேண்டும். உங்களுடைய ஆத்மீக ஆகாரத்தை நீங்கள் அங்கு பெற்று கொள்கிறபடியால் அங்கு உங்களுடைய தசம பாகம் கொடுக்கப்பட வேண்டும்.
.
              பின், வட இந்தியாவில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் உண்மையாய் ஊழியம் செய்கிற ஒவ்வொரு ஊழியங்களையும் உங்கள் மன விருப்பத்தின்படி தாங்கலாம்.
.
               தேசத்திலே நிலத்தின் வித்திலும் விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது (லேவியராகமம் 27:30).  ஆகையால் கர்த்தருக்குரியதை கர்த்தருக்கே கொடுப்போம். முதலாவது நம்மை அவருக்கு கொடுப்போம்,  பின் நம்முடையதை அவருக்கு கொடுப்போம் கர்த்தர் நம்மை இடம் கொள்ளாமல் போகுமட்டும் ஆசீர்வதிப்பார். கர்த்தருடைய வார்த்தை அப்படி சொல்கிறது, அப்படியே செய்யும். ஆமென் அல்லேலூயா!
.
என்ன கொடுப்பேன் என் இயேசுவுக்கு 
என் வாழ்வில் செய்த நன்மை ஏராளமே
ஏராளம் ஏராளம் ஏராளமே 
கர்த்தர் செய்த நன்மைகள் ஏராளமே 
 

                                               ஜெபம் 

           எங்களை இடம் கொள்ளாமற் போகுமட்டும் ஆசீர்வதிப்பேன் என்று ஆசீர்வதிக்கிற நல்ல கர்த்தரே, உம்மை துதிக்கிறோம். முதலாவது எங்களையும் பின் எங்களது தசமபாகங்களையும் உமக்கு கொடுக்க எங்கள் ஆததுமாக்களை ஏவியருளும். அதன் மூலம் ஆசீர்வாதங்களை பெற்று உமக்கென்று சாட்சியாக ஜீவிக்க கிருபை செய்யும்.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.



No comments:

Post a Comment